

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்குமார். இவர், நேற்று முன்தினம் ஜவ்வாது மலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மலையடிவாரம் வந்தபோது அங்கிருந்த சிலர் ராஜேஷ்குமாரை வழி மறித்து அவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சிலர் ராஜேஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ராஜேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புங்கம்பட்டு நாடு ஊராட்சியைச் சேர்ந்த சின்னகாளி (32), வாசு (33), காளியப்பன் (45) மற்றொரு காளியப்பன்(48) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.