Last Updated : 13 Feb, 2022 01:03 PM

 

Published : 13 Feb 2022 01:03 PM
Last Updated : 13 Feb 2022 01:03 PM

தஞ்சாவூரில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு; மதுபாட்டில்கள், கார் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக தஞ்சாவூர் போலீஸ் எஸ்பி சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமைக் காவலர் உமா சங்கர், காவலர்கள் கவுதமன், அருண்மொழி வர்மன், அழகு சுந்தரம், நவீன், சுஜித் மற்றும் போலீஸார் இன்று 13-ம் தேதி துலுக்கம்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் துலுக்கம்பட்டியில் ஒரு போலி மதுபான ஆலை சட்டவிரோதமாக இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடோனுக்குள் போலீஸார் நுழைந்தனர். அப்போது அங்கு இருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் பொட்டுவாசாவடியை சேர்ந்த மெல்வின் சகாயராஜ் என்பவர் கடந்த 4 மாதமாக போலி மதுபான ஆலை நடத்தி வந்ததும், இதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து மதுபானங்கள் தயாரித்து அதனை போலி ஸ்டிக்கர்களை ஒட்டி வெளியே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்தப் போலி மதுபான ஆலையில் அறிவழகன், அருண்குமார், முத்துக்குமார் ,பழனி, பாபு ஆகியோர் வேலை பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆலையில் இருந்து 650 மது பாட்டில்கள், 2000 காலி மது பாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், டிரம்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், டாட்டா இன்டிகா கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து போலி மதுபான ஆலை நடத்தி வந்த மெல்வின் சகாயராஜ், அங்கு வேலை பார்த்த அறிவழகன், அருண்குமார் ,முத்துக்குமார், பழனி, பாபு ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மதுபானம் தயாரித்து யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளார்கள்? இந்த ஊருக்கெல்லாம் விற்பனைக்காக கொண்டு சென்றார்கள்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட 6 பேரும் திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போலி மதுபான ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x