

ஈரோட்டில் ஈமு கோழி மற்றும் நாட்டுக்கோழி நிறுவனங்கள் நடத்தி ரூ.3.95 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், கணவன், மனைவிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கேசரிமங்கலம் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்.குமார். இவர் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அளித்த புகாரில், “ஈரோட்டைச் சேர்ந்த பாண்டியன் (எ) முருகவேல், அவரது மனைவி மாரியம்மாள் (எ) லதா ஆகியோர் நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் நித்யா பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்தனர். இதை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
விசாரணையில், 244 முதலீட்டாளர்களிடம் ரூ.3 கோடியே 95 லட்சத்து72 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முருகவேல், லதா உட்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை முதலீட்டாளர் நலன்சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் முருகவேல் மற்றும் லதாவுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ.2 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். மற்ற 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.