

ராமநாதபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் வழியாக சுவாமி சிலைகள் கடத்தப்படுவதாக மதுரை மண்டல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு 2021 டிசம்பரில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கீழக்கரையைச் சேர்ந்த பாக்கியராஜ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் சிலைக்கடத்தல் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் எஸ்.முருகபூபதி, விஜயகுமார், கணேசன் விசாரணை நடத்தினர்.
அதில், சேலத்தி லிருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 சுவாமி சிலைகளைக் கடத்தி வந்து ராமநாதபுரம் கூரிச்சாத்த அய்யனார் கோயில் பகுதி கால்வாய்க்குள்பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்ட பாஜக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் அலெக்சாண்டர், காவலர்கள் இளங்குமரன், நாகநாகேந்திரன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸார் கைது செய்து சிலைகளைக் கைப்பற்றினர்.
தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜேஷை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்த கைப்பற்றிய மொபைல் போனில் விலையுயர்ந்த வலம்புரிச் சங்கு, யானைத் தந்தங்கள், பழமையான கோயில் கலசங்களின் புகைப்படங்கள் இருந்தன. இவற்றைப் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.
மேலும் ராமநாதபுரத்தில் ஒரு வீட்டில் ரூ.200 கோடி மதிப்புள்ள பழமையான சுவாமி சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அச்சிலைகளை மீட்பதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.