உதகை நகரப் பேருந்து நிலையம் அருகே இளைஞர் கொலை: நேரில் கண்ட மக்கள் அலறல்

உதகை நகரப் பேருந்து நிலையம் அருகே இளைஞர் கொலை: நேரில் கண்ட மக்கள் அலறல்
Updated on
1 min read

உதகை: உதகை நகரப் பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக் கொரை பகுதி சேர்ந்தவர் ஹரி (36). அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (38). இருவரும் இன்று மதியம் பேருந்தில் உதகை நகருக்கு வந்துள்ளனர். பேருந்திலிருந்து இறங்கிய கார்த்திக் மற்றும் ஹரி இருவரும், அங்குள்ள பயணியர் நிழற்குடையில் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு உள்ளனர். பின்பு, ஹரி பயணிகள் நிழற்குடையில் அமர்ந்திருந்தபோது கார்த்திக் திடீரென சாலையோரம் இருந்த பாத்திரக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து ஹரியின் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இப்பகுதியில் பேருந்துக்காக நின்றிருந்த பொதுமக்கள் இதைக் கண்டு அலறியடித்து ஓடினர். பின்பு தகவல் அறிந்த பி1 போலீஸார் சம்பவ பகுதிக்கு வந்து, இறந்த ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கத்தியால் குத்திய கார்த்திக் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ”கார்த்திக் என்பவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். ஏற்கெனவே பலமுறை போலீஸாரிடம் அவர் நடவடிக்கைகள் குறித்து தகவல் அளித்திருந்தோம். இன்று ஒருவரை கொலை செய்யும் அளவுக்கு அவரின் நடவடிக்கை மாறியுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in