

திருப்பூர்: திருப்பூரில் சூட்கேஸில் மீட்கப்பட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் கொலை வழக்கில், ஓசூரில் ஒருவரை திருப்பூர் தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை எம்.புதுப்பாளையம் நீலிக்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், கடந்த 7-ம் தேதி சூட்கேஸில் பெண் சடலம் கிடந்ததை, அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து, நல்லூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடலில் காயங்களுடன் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து சாக்கடை கால்வாயில் வீசியிருப்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் இருவர் சூட்கேஸுடன் திருப்பூர் மாநகர் பகுதியில் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்தனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் நேகா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் இருந்த அவரது கணவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபிஜித் (27) மற்றும் மற்றொருவரை தேடி வந்தனர். இது தொடர்பாக நல்லூர் போலீஸார் அவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு விசாரித்தனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ஓசூருக்கு விரைந்தனர்.
இந்த நிலையில், ஓசூர் அருகே பாத்தகோட்டா கிராமத்தில் பதுங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெயலால் சவ்ரா (27) என்பவரை இன்று கைது செய்தனர்.