

ஆம்புலன்ஸ் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் பலகோடிரூபாய் மதிப்புடைய கஞ்சாவை கடத்துவதாக கோவை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில், கடந்த 2019 அக்டோபர் 22-ம் தேதி உடுமலையிலிருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்புலன்ஸை, உடுமலை மின்மயானம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதில் சோதனை செய்தபோது 240 கிலோ எடையுள்ள கஞ்சா மூட் டைகள் இருந்தது தெரியவந்தது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரான உடுமலையைச் சேர்ந்த அருண்குமார் (24) பிடிபட்டார்.
உரிமையாளரான கருப்புசாமி (33) தப்பி ஓடிவிட்டார்.விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், கருப்புசாமியின் வீட்டில் சோதனை நடத்தி 13 மூட்டைகளில் இருந்த 260 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், கருப்புசாமியும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருட்கள் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கருப்புசாமி, அருண்குமார் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி என்.லோகேஸ்வரன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.சிவகுமார் ஆஜரானார்.