11 கிலோ போதைப்பொருள் சிக்கிய விவகாரம்: இலங்கையை சேர்ந்தவர்களிடம் விசாரணை

11 கிலோ போதைப்பொருள் சிக்கிய விவகாரம்: இலங்கையை சேர்ந்தவர்களிடம் விசாரணை
Updated on
1 min read

சென்னை: சென்னை அருகே வாகன சோதனையில் 11 கிலோ அம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில், இலங்கையை சேர்ந்தவர்களிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியே சென்ற மினி லாரியை வழிமறித்து சோதனை நடத்தியதில், லாரியின் ரகசிய அறையில் அம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. சுமார் 11 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

மேலும், போதைப்பொருளைக் கடத்துவதற்கு நிதி அளித்தவர்கள், போதைப்பொருளை வாங்குபவர்கள், விற்பவர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள அழசநா என்ற இடத்திலிருந்து சென்னை வழியாக இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

மேலும், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல், கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை, தமிழ்நாடு, மியான்மரில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 8 கிலோமெத்தபட்டமைன் என்ற போதைப்பொருளை இக்கும்பல் கடத்தியதும் தெரியவந்துள்ளது.

தற்போது சிக்கியுள்ள இந்தகும்பலுக்கு சர்வதேச அளவில்போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக இன்டர்போல் போலீஸார் கடந்த4 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். தற்போது பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கிஇருப்பதும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் இதில் கைது செய்யப்பட்டு இருப்பதும் அதிகாரிகளிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தமிழகத்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in