Published : 11 Feb 2022 07:19 AM
Last Updated : 11 Feb 2022 07:19 AM

காட்பாடி அருகே சதி திட்டம் தீட்டிய கும்பல் சிக்கியது: பிடிபட்ட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி-குடியாத்தம் சாலையில் கிளித்தான்பட்டரை அருகேயுள்ள கடை ஒன்றில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒரு கும்பல் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றிவளைத்தனர்.

அந்த நேரத்தில் கடைக்கு வெளியே நின்றிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்று அங்கிருந்த இரு சக்கர வாகனம்ஒன்றை இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் குடியாத்தம் நோக்கி பறந்து சென்றது. இதைப்பார்த்த காவல் துறையினர் அந்த காரை விரட்டிச் சென்றனர். அந்த கார் எல்.ஜி புதூர் அருகே சென்றதும் சாலையோரத்தில் நின்றது. காரில் இருந்த இரண்டு பேர் இறங்கி ஊருக்குள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டியதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில், காவல் துறையினர் வசம் பிடிபட்ட 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் எல்ஜி புதூர் கிராமத்தில் சிக்கியவர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்றும், மற்றவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த பாஷா (25), மணலியைச் சேர்ந்த அசோக் (39), ராயபுரத்தைச் சேர்ந்த மாதவன் (27), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாலன் (26) என்பதும் தெரியவந்தது.

இதில், இம்ரான் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேரணாம்பட்டில் காரில் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதும், அப்போது அந்த காரில் இருந்து பாஜக கொடி, வாள் மற்றும் கையெறி குண்டு போன்ற சிகரெட் லைட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் கூட்டணி பின்னணி குறித்தும் எதற்காக கும்பலாக சேர்ந்தார்கள் என்றும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x