

வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.
பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தாலும், இழந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.
இதை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் (ஹெல்ப்லைன்) சைபர் க்ரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சைபர் க்ரைம்காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்கூறும்போது, "வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள்ஹெல்ப் லைன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்" என்றார்.