திருப்பத்தூரில் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தில் மனைவி புகார்

திருப்பத்தூரில் கணவரை காணவில்லை என 4 வயது மகனுடன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பாஞ்சாலை.
திருப்பத்தூரில் கணவரை காணவில்லை என 4 வயது மகனுடன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பாஞ்சாலை.
Updated on
1 min read

திருப்பத்தூர்: காதலியுடன் மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் செளத்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் பாஞ்சாலை(30) என்பவர் தனது 4 வயது மகனுடன் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

‘கூலித்தொழிலாளியின் மகளான எனக்கும், திருப்பத்தூர் அடுத்த நந்தம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜசேகர் (32) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களால் முடிவு செய்து எங்கள் திருமணம் முறைப்படி நடைபெற்றது. எங்களுக்கு 4 வயதில் மூளை வளர்ச்சி குன்றிய மகன் உள்ளார். குழந்தையை பராமரிக்க நான் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறேன். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த சிவரஞ்சினி (30) என்ற பெண்ணுடன் என் கணவர் நெருங்கி பழகி வருவது தெரியவந்தது.

இது குறித்து எனது கணவரிடம் கேட்டபோது அவர் என்னிடம் தகராறு செய்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற எனது கணவர் ராஜசேகர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய போது அவர் சிவரஞ்சினியுடன் மாயமானது தெரியவந்தது. எனவே, காதலியுடன் மாயமான எனது கணவரை மீட்டுத் தரவேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்ற காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in