

கும்மிடிப்பூண்டி: கோயம்புத்தூர் மாவட்டம், கொண்டாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (33). இவர், தன்நண்பரான சங்கர்(34) என்பவருடன், சென்னை மணலியை சேர்ந்த அரி என்பவர் மூலம் குறைந்த விலைக்கு பைக் வாங்குவதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டைக்கு கடந்த 3-ம் தேதி வந்தார்.
அப்போது, அங்கிருந்த அரியின் நண்பர் சுரேஷ்குமாரையும், சங்கரையும் கவரப்பேட்டை அருகே கன்லூர் மயானத்துக்கு அருகே உள்ள தைல மர தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்குப் பதுங்கியிருந்த கும்பல், சுரேஷ்குமாரையும், சங்கரையும் கத்தியால் தாக்கி, பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சங்கரின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.15 ஆயிரத்தை எடுத்துள்ளது. பின்னர் சங்கரின் குடும்பத்தினர் மூலம், ரூ.10 ஆயிரத்தை கூகுள் பே மூலம் பறித்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து, சுரேஷ்குமார், திருவள்ளூர் எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். எஸ்பி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையில், கன்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவுடிகளான மோகன்சந்த், சரண் என்கிற விக்கி உள்ளிட்டவர்கள்தான் சுரேஷ்குமார், சங்கரை தாக்கி பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் கன்லூர் கிராமத்துக்கு விரைந்த போலீஸார், மோகன்சந்த், விக்கி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பாழடைந்த கட்டிடம்
அதன் அடிப்படையில், கவரப்பேட்டை- சத்தியவேடு சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு போலீஸார் சென்றனர். அப்போது, அங்கிருந்த 10 பேரில் 3 பேர் தப்பியோடினர். மற்றவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவ்விசாரணையில், சுரேஷ்குமார், சங்கரிடம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்தோர், தாங்கள் பதுங்கியிருந்த அந்த பாழடைந்த கட்டிடத்தை ரவுடிகளுக்காக கத்தி, அரிவாள் தயாரிக்கும் பட்டறையாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர், அங்கிருந்த 7 பட்டாக் கத்திகள், ஒரு வெல்டிங் மெஷின், ஒரு டம்மி கைத்துப்பாக்கி, ஒருபைக், 10 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, போலீஸார், மோகன்சந்த், விக்கி மற்றும் அவர்களது கூட்டாளிகளான தங்கராஜ்(26), சங்கர்(22), ராம் என்கிற கொக்கு(24), மணி என்கிற பொட்டுமணி(22), மணி என்கிற போண்டாமணி(28), தளபதி(29), மணிகண்டன் என்கிற குரங்குமணி(23) ஆகிய 9 பேரை கைது செய்தனர். தப்பியோடிய, அருண்ராஜ், ராஜா, அரி ஆகியோரை தேடி வருகின்றனர்.