Published : 07 Feb 2022 09:41 AM
Last Updated : 07 Feb 2022 09:41 AM

திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் தந்தை, மகன் உட்பட 4 பேர் கைது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை கத்தியால் குத்தி அவரது மனைவி மற்றும் மகளிடம் இருந்து தங்க நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் தந்தை, மகன் உட்பட 4 பேரை தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம் குரும்பேரி கொள்ளக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் குப்புசாமி (77). இவரது மனைவி சரோஜா(70). இவர்கள் குரும்பேரியில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இவர்களது மகள் கல்யாணி (40) இவர், சிங்காரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், பெற்றோரை பார்க்க கல்யாணி தனது மகளுடன் கடந்த வாரம் குரும்பேரிக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு குப்புசாமி தனது குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார். அப்போது, இரவு சுமார் 8 மணியளவில் அவரது வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், நீண்ட நேரமாகியும் மின் இணைப்பு வராததால் சந்தேகமடைந்த குப்புசாமி இரவு 10 மணியளவில் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார்.

அங்கு மறைந்திருந்த சிலர் திடீரென குப்புசாமி வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, அவர்களை தடுக்க முயன்ற குப்பு சாமியை அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், ரத்த வெள்ளத்தில் குப்புசாமி கீழே விழுந்தார். அதன்பின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் கல்யாணி மற்றும் சரோஜா காதில் இருந்த ஒரு பவுன் கம்மலை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இதனைத்தொடர்ந்து, குப்பு சாமியை கத்தியால் குத்தி விட்டு, தங்க நகைகளை அபகரித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க2 தனிப்படைகளை அமைத்து திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர்பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் சுற்றித்திரிவதாக வந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், திருப் பத்தூர் அடுத்த திருமால் நகர் ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த முருகன்(45), ஏலகிரி கிராமம் உடுமாசி வட்டத்தைச் சேர்ந்த காந்த்(37), ஏலகிரி கிராமம் பங்கியான் வட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்(52) மற்றும் அவரது மகன் அரவிந்த்குமார்(25) என்பதும் தெரியவந்தது. இவர்கள் தான் குரும்பேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமியை கத்தியால் குத்தி அவரது மனைவி மற்றும் மகளிடம் இருந்து தங்க நகைகளை பறித்துச்சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட வழக் கில் 3 நாட்களில் துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x