ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 190 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கஞ்சா கடத்துவதாக கேரள போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாளையாறு சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்று, போலீஸாரை கண்டதும் பொள்ளாச்சி மற்றும் பல்லடம் வழியாக திருப்பூருக்குள் செல்வதை போலீஸார் கண்டனர்.
அவர்களை பின் தொடர்ந்து வந்த கேரள மாநில போலீஸார், 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியான சிறுபூலுவப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த வேனை, திருப்பூர் மாநகர போலீஸார் உதவியுடன் பிடித்தனர். வேனில் வந்தவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சிவராம் (29) மற்றும் இடுக்கியை சேர்ந்த ஜோபி (45) என்பதும், 190 கிலோ கஞ்சாவை கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
