

திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை கத்தியால் குத்தி அவரது மனைவி மற்றும் மகளிடம் இருந்து தங்க நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி.,டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் குப்புசாமி (77). இவர், தனது மனைவி சரோஜா (70) என்பவருடன் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அக்கம், பக்கத்தில் வீடுகள் இல்லை.
இவரது மகள் கல்யாணி (40) கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில், பெற்றோரை பார்க்க கல்யாணி தனது மகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குரும்பேரிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு குப்புசாமி தனது குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார். இரவு 8 மணியளவில் அவரது வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின் இணைப்பு வராததால் சந்தேகமடைந்த குப்புசாமி இரவு 10 மணியளவில் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார்.
அப்போது, அங்கு மறைந் திருந்த 4 பேர் திடீரென குப்புசாமி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களை தடுக்க முயன்ற குப்புசாமியை அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், ரத்த வெள்ளத்தில் குப்புசாமி விழுந்தார். இதைக்கண்டதும், சரோஜாவும், அவரது மகள் கல்யாணியும் அலறி துடித்தனர்.
வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கதவை உள்பக்கமாக தாழிட்டு அவர்களை கத்தி முனையில் மிரட்டினர். அவர்களிடம் இருந்து பீரோ சாவியை பெற்று அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கல்யாணி காதில் இருந்த அரைபவுன் கம்மல், சரோஜா காதில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். பின்னர், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு தப்பியோடினர்.
இதைத்தொடர்ந்து, மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த குப்புசாமி மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம், கிராமிய காவல் ஆய்வாளர் திருமால் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு, வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னர், குப்புசாமியை கத்தியால் குத்திவிட்டு, பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை பிடிக்க திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையிலும், கிராமிய காவல் ஆய்வாளர் திருமால் தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தர விட்டார்.