

விழுப்புரம்: செஞ்சி அருகே 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அம்மாணவியின் அண்ணன் முறையுள்ள ஒருவரும் பாலியல் கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் அண்ணன் முறையுள்ள மோகன் (32) மற்றும் இளையராஜா (28) ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய எஸ்பி நாதா ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதனை பரிசீலித்த விழுப்புரம் ஆட்சியர் அந்த 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்த மோகன்மற்றும் இளையராஜா ஆகியோரிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறை ஊழியர்கள் மூலம் நேற்று போலீஸார் வழங்கினர்.