திருப்பூர்: மின்வாரிய பொறியாளர் கொலை வழக்கில் வயர்மேனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர்: மின்வாரிய பொறியாளர் கொலை வழக்கில் வயர்மேனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிழுவங்காட்டூரில் மின்வாரிய துணைமின் நிலையத்தில் பொறியாளராக பணிபுரிந்தவர் மணிபிரபு (36). இருவருக்குதிருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.உடுமலை எஸ்.வி.புரத்தில் குடும்பத்துடன் மணிபிரபு வசித்து வந்தார். இவர், மின்வாரியத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து வந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த வயர்மேன் கண்ணன் (48) என்பவருக்கும், மணிபிரபுவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2020 மார்ச் 3-ம் தேதி பணிமுடிந்து வீட்டுக்கு மணி பிரபு சென்று கொண்டிருந்தார். அப்போது,அந்த வழியாக சென்ற கண்ணன் கட்டையால் தாக்கியதில், மணிபிரபுவை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மணிபிரபுவை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுதொடர்பாக குமரலிங்கம் போலீஸார்கொலை வழக்கு பதிந்து,கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன், கண்ணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்துநேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் கண்ணன் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் ச.கனசபாபதி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in