

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் ரவுண்டானா அருகே சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களையும், ஒரு சரக்கு வேனையும் போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வேனில் கோழித் தீவன மூட்டைகளுக்கு அடியில் தலா 2 கிலோ எடையுள்ள 250 பொட்டலங்களில் 500 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சா பொட்டலங்களை, சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரது படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸார், காரில் வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகம்(32), அலெக்ஸ் பாண்டியன் (37), முத்துப்பேட்டை ஜாம்புவானோடையைச் சேர்ந்த ரங்கேஸ்வரன்(26), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த உமாபதி(32) மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சேகர் என்ற சந்திரசேகர்(49), நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல்(44) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா, 2 கார்கள், ஒரு லோடுவேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நாகை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.