வண்டலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா மூல பொருள் பறிமுதல்: 7 பேர் கைது

வண்டலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா மூல பொருள் பறிமுதல்: 7 பேர் கைது
Updated on
1 min read

வண்டலூர்: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மாலை காயரம்பேடு பிருந்தாவன்அவென்யூ பகுதியில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஷாஜாத்(36), அலி உசேன் (36), அப்துல் ரஹிம் (36), அப்துல் ஹாசிம் (62), ஷேக் அயூப் (38) ஆகிய 5 பேரையும் போலீஸார் மடக்கி பிடித்தனர்.

வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள மாவா என்கிற பான்மசாலா பொருட்கள், மேலும் பான்மசாலாவை தயாரிக்க தேவையான சுமார் 1500 கிலோ கொண்ட ஜர்தா 50 மூட்டைகள், 1 கிலோ எடை கொண்ட சுண்ணாம்பு டப்பா 4, சீவல் பாக்கு 2 கிலோ, மாவா பொருளை அரைக்க பயன்படுத்திய 4 கிரைண்டர்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து மடக்கிப் பிடிக்கப்பட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் மறைமலைநகர் மூலவர் தெருவில் முகமது என்பவர் வீட்டில் 600 கிலோ எடை கொண்ட பான் மசாலா மூலப்பொருட்களை மறைமலைநகர் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம். இது தொடர்பாக முகமது குர்ஷித், முகமது சர்ப்பு ராஜ், முகமது ஜாஹித் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in