பொள்ளாச்சி: தங்கமுலாம் பூசிய உலோகத்தை தங்கக்கட்டி எனக்கூறி ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த 3 பேர் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தங்கமுலாம் பூசிய உலோகத்தை தங்கக்கட்டி எனக்கூறி, கோவையை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த3 பேரை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் நீலாம்பூர் முதலிபாளையம் ரங்காநகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவர், லேத் வொர்க் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 20-ம் தேதி இவரை மொபைல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் மண்அள்ளும் கூலி வேலை செய்து வருவதாகவும், மண் அள்ளும்போது தங்கக்கட்டி கிடைத்ததாகவும் கூறி உள்ளார். ரூ.15 லட்சம் மதிப்புடைய அந்த தங்கக்கட்டியை, ரூ.10 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பியஷேக் அலாவுதீன், அந்நபர் தெரிவித்தபடி கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த 3 பேர், ஷேக் அலாவுதீனிடம் வந்து தங்கநிறத்திலான கட்டியை கொடுத்துவிட்டு, ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர். ரூ.5 லட்சத்தை கொடுத்த ஷேக் அலாவுதீன், மீதி தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, ரூ. 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து சென்றனர்.

ஊருக்கு திரும்பிய நிலையில், கடந்த 27-ம் தேதி சோதனை செய்து பார்த்தபோது, சுமார் 2 கிலோ உலோகத்தின் மீது தங்கமுலாம் பூசப்பட்டிருந்ததும், தங்கக்கட்டி எனக்கூறி தன்னை அக்கும்பல் ஏமாற்றியதும், ஷேக் அலாவுதீனுக்கு தெரியவந்தது.

கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பொள்ளாச்சி மின்நகர் நிஜாம் சின்னபாவா (44), சூளேஸ்வரன்பட்டி உசேன் அலி (34), ஆனைமலையை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (53) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பொள்ளாச்சி வால்பாறை சாலையில் 3 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in