

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே ரயில்வே அதிகாரி விபத்தில் இறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அவரை காரை ஏற்றி கொலை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் நா.செந்தாமரைக் கண்ணன் (56). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளராக வேலை பார்த்தார். கடந்த 16.1.2022 அன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் கால்வாய் கிராமம் அருகே பின்னால் வந்த கார், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
பலத்த காயமடைந்த செந்தாமரைக் கண்ணன், சிகிச்சை பலனின்றி இறந்தார். செய்துங்கநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஆய்வாளர் அருள் தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விபத்துக்குக் காரணமான காரை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலைஎன தெரியவந்தது.
வல்லநாட்டைச் சேர்ந்த ம.மகேஷ் (33), கலியாவூரைச் சேர்ந்த சொ.சுடலைமணி (29), திருநெல்வேலி மூளிக்குளத்தைச் சேர்ந்த ஜெகன்பாண்டியன், பக்கப்பட்டியைச் சேர்ந்த மார்த்தாண்டம், கந்தகுமார் ஆகிய 5 பேரும், செந்தாமரைக் கண்ணன் மீது காரைமோதவிட்டு கொலை செய்ததுதெரியவந்தது. இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகேஷ்மற்றும் சுடலைமணியை போலீஸார் நேற்று கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, நேற்று செய்துங்கநல்லூரில் செய்தியாளர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட செந்தாமரைக் கண்ணனின் சொந்த ஊர்நாசரேத். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சாம்ராட் குடும்பத்தாருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரும், சாம்ராட்டும் நண்பர்கள். கடந்த 4.1.2022 அன்று இவர்கள் அனைவரும் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு நடந்தரயில் விபத்தில் சாம்ராட் உயிரிழந்தார். இதையறிந்த, செந்தாமரைக் கண்ணன் சமூக வலைதளங்களில், ‘சாம்ராட் இறந்தது இறைவனுடைய தண்டனை' என்று பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து ஆத்திரமடைந்த 5 பேரும், செந்தாமரைக் கண்ணன் மீது காரை மோதவிட்டு கொலை செய்துள்ளனர். மற்ற 3 பேரும் விரைவில் பிடிபடுவார்கள்.இவ்வாறு எஸ்பி கூறினார்.
இந்த வழக்கில் நுட்பமாக செயல்பட்ட ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீஸாரை எஸ்பி பாராட்டினார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், பயிற்சி டிஎஸ்பி ஷாமளாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.