

ஆண்டிபட்டி: யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேரை ஆண்டிபட்டி வனத்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வனச்சரகம் சந்தமலைப் பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்களை சோதனை செய்ததில் சாக்குப்பையில் 300 கிலோ எடையுள்ள இறந்த காட்டுப்பன்றியின் உடல் மற்றும் வெடிமருந்து இருப்பது தெரியவந்தது.
இருவரையும் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இருவரும் ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையைச் சேர்ந்த சிவக்குமார்(26), ஏத்தக்கோவிலைச் சேர்ந்த வேல்சாமி(29) என்பதும், யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை கொன்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.