Published : 28 Jan 2022 07:12 AM
Last Updated : 28 Jan 2022 07:12 AM

சென்னையில் கரோனா வைரஸ் தடுப்பூசி போட அரசு நிவாரணம் தருவதாக ஏமாற்றி வங்கிக் கணக்கை பெற்று மோசடி: விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தல்

சென்னை: கரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாக கூறி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இதிலும் சில நபர்கள் மோசடி செய்து, மக்களிடம் பணத்தை பறித்து வருகின்றனர். அப்பாவி மக்களை குறிவைத்து பணத்தை சுருட்டும் அவர்கள், ‘நாடு முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்படுகிறது. அதைப் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறி, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை பெறுகின்றனர். செல்போனுக்கு வரும் ஓடிபியை (ரகசிய குறியீட்டு எண்) பெற்று, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலருக்கும் இதுபோன்ற மோசடி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. பலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பணத்தை இழந்தவர்கள் புகாரும் கொடுத்துள்ளனர்.

எனவே, இதுபோன்ற போலி, மோசடி அழைப்புகளை நம்பி யாரும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும், கரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து இணையதளங்களில் தேடும்போது, பிரபல மருத்துவமனைகளின் பெயர்களில் போலியான இணையதளங்கள் வருகின்றன. அதை அறியாமல் கிளிக் செய்து உள்ளே சென்றால், கரோனா தடுப்பூசிக்கான கட்டணம் என ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை உள்ளன. இது போலி இணையதளம் என்று தெரியாமல் பலர் அதில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். எனவே, இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x