

புதுச்சேரி சிறைக்குள் சரக்குவாகனத்தில் கஞ்சா, செல்போன் கள் உள்ளிட்டவற்றை சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்காக சிறைக்கு ஒரு மினி வேனில் ஷாமியானா பந்தல் கொண்டு வரப்பட்டது. அப்போது, அந்த மினி வேனை சிறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், 137 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், 10 பொட்டலங்கள் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள், 5 சிகரெட் லைட்டர்கள், 4 பீடி பண்டல்கள், 2 செல்போன் சார்ஜர்கள் ஆகியவை ஷாமியானா பந்தலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பொருட்களை ஏற்றி வந்த மினி வேனின் ஓட்டுநரும், அண்ணா சாலையில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் ஊழியருமான வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39) என்பவரை சிறை அதிகாரிகள் பிடித்தனர்.
சிறை அதிகாரிகள் மேற் கொண்ட விசாரணையில் அவர், ரவுடி பாம் ரவி இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் காலாப்பட்டு காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் போலீஸார் சிறைத்துறை விதிமீறல் பிரிவின் கீழ் பாஸ்கர் மற்றும் கைதி விக்கி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பாஸ்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள விக்கியை காலாப்பட்டு போலீஸார் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.