

பண்ருட்டி அருகே மருங்கூர் கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் மகன் அஸ்வின்(4). இச்சிறுவன் நேற்று முன்தினம் மாலை முதல் மாயமாகியுள்ளார். இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பல இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. இதனால் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவன் கிடைக்காத விரக்தியில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னை- கும்பகோணம் சாலையில் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி டிஎஸ்பி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.அதனை தொடர்ந்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் சிறுவன் உடலை கண்டெடுத்த போலீஸார், பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ரஞ்சிதா என்பவர் அச்சிறுவனை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அப்பெண்ணிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.