

நகை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த பிஹார் இளைஞர்கள் இரண்டு பேரை பாம்பன் போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் அருகே பாம்பன் பாரதியார் நகரில் சங்கரி என்ற பெண்ணிடம் புதன்கிழமை மாலை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் நகை பாலிஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். சங்கரி 4 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பாலிஷ் செய்யக் கொடுத்துள்ளார்.
தாலிச் சங்கிலியை வடமாநில இளைஞர்கள் ரசாயனத்தில் வைத்து பாலீஷ் செய்த பின்னர் அதன் எடை குறைந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சங்கரி கூச்சலிட்டுள்ளார்.
உடனே அங்கிருந்து தப்ப முயன்ற வட மாநில இளைஞர்களில் ஒருவர் அப்பகுதி மக்களிடம் சிக்கினார். மற்றொருவர் தப்பினார். தொடர்ந்து பிடிபட்ட அந்த வட மாநில இளைஞரை பாம்பன் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையின் விசாரணையில் இருவரும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பிடிபட்டவர் பிவின் குமார்(24), தப்பி ஓடியது பப்பு குமார்(28) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து பப்புகுமாரை புதுக்கோட்டையில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து பாதரசம், நகையை பாலீஷ் போட பயன்படுத்தும் ரசாயனம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் யாராவது தமிழகத்தில் தங்கி உள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.