

திருப்பதி: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி, அவற்றை திருப்பதி அருகே சின்னகொட்டி கள்ளு பகுதியில் ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த கும்பலை திருப்பதி அதிரடிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பதி அதிரடிப்படை டிஎஸ்பி முரளிதர் நேற்று மேலும் கூறியதாவது:
திருப்பதி - பாக்கராபேட்டை சாலை மார்கத்தில் அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னகொட்டி கள்ளு மண்டலம் சாமலா பகுதியில் 6 பேர் செம்மரங்களை தோளில் சுமந்து செல்வதைக் கண்டனர். பிறகு அவர்கள் செம்மரங்களை ஒரு வேனில் ஏற்றும்போது சுற்றிவளைத்து பிடித்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த ரமேஷ் (28), துரைசாமி (35), குமாரசுவாமி (30), பொன்னுசாமி (56), ஆனந்தன் (21) மற்றும் மதியழகன் (20) என விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 9 செம்மரங்களும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலை பிடித்த அதிரடிப்படை குழுவினரை எஸ்.பி. சுந்தர ராவ் வெகுவாக பாராட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.