

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலக (டிபிஐ) வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்துள்ளார்.
அவரை விசாரித்தபோது, தனக்கு பள்ளிக்கல்வித் துறையில் வேலை கிடைத்துள்ளது என்று கூறி பணி நியமன ஆணைகளைக் காண்பித்துள்ளார். சந்தேகமடைந்த பணியாளர்கள், நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்டவர் ராயப்பேட்டை பி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன்(30) என்பதும், தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
மேலும், இவர் பள்ளிக்கல்வித் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை தயாரித்துக் கொடுத்து ஏமாற்றியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த போலி பணி நியமன ஆணைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.