

சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்றனர்.
தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, குழந்தைகள் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர்.
சிலதினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு, காளையார்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர் பீரோ உள்ளிட்ட இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், நகை, பணம் எதுவும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து போட்டு அதில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடினர்.
இதில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தேவகோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீய ணைப்பு நிலைய அலுவலர் ரவிமணி தலைமையில் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரில் தேவகோட்டை டவுன் போலீஸார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடுகின்றனர்.