

கோவையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் கே.வி.என்.ஜெயராமன் (47). அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர். நெ.4. வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
இவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக, கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு அசையும் சொத்துகள், நகைகள், வங்கி வைப்புத்தொகை என மொத்தமாக ரூ.1.25 கோடி இருப்பதாக தெரிவித்திருந்தார் என்றும், இந்த சொத்துகள் அனைத்தும் அவரது பெயரிலும், அவரது மனைவி ஜெ.கீர்த்தி (36) பெயரிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார் என்றும், பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2016-ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ.3.43 கோடியாக உயர்ந்திருந்தது என்றும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் வருமானத்தை விட அதிகமாக ரூ.1.45 கோடி சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.
கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி, ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி மீது கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டி, ஒரு ஆய்வாளர் தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை 11 மணிக்கு ஜெயராமன் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து சோதனை தொடர்ந்து நடைபெற்றது.