

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.64 கோடி நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வங்கியின் செயலர் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராக ம.கலைச்செல்வி (58), கண்காணிப்பாளராக பி.வி.ஜெய(51), நகை மதிப்பீட்டாளராக ஜெ.விஜயகுமார்(47) பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுக் கொண்டு ரூ.1 கோடியே 64 லட்சம் நகைக் கடன் வழங்கியுள்ளனர்.
இந்த மோசடி வங்கியின் தணிக்கையின்போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் சுவாதி சென்னையில் உள்ள வணிக குற்றப் புலானாய்வுப் பிரிவுகாவல் கண்காணிப்பாளர் பழனிகுமாரிடம் இது தொடர்பாக புகார்அளித்தார். அந்தப் புகார் காஞ்சிபுரத்தில் உள்ள வணிக குற்றப் புலானாய்வு பிரிவு மூலம் விசாரிக்கப்பட்டது.
இந்த விசாரணையில் ரூ.1.64 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது உண்மை எனத் தெரிய வந்தது.
எனவே வங்கியின் செயலர் ம.கலைச்செல்வி, நகை மதிப்பீட்டாளர் ஜெ.விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். வங்கியின் கண்காணிப்பாளர் பி.வி.ஜெயயையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் மூவரும் இந்தப் பிரச்சினையில் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.