

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராசு(55). விவசாயியான இவரது மகள் ராகவி(15), பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற ராகவி மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவரது பெற்றோர் ராகவியை பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான வயலில் உள்ள தரைக் கிணற்றின் மேல் கட்டையில் ராகவியின் செருப்பு, கண்ணாடி, கைக் கடிகாரம் ஆகியவை இருந்ததைக் கண்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ராகவியின் பெற்றோர் வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் வந்து. கிணற்றில் இறங்கி ராகவியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸார் அங்கு சென்று, ராகவியின் சடலத்தை கைப்பற்றி, அவரது உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.