

காட்பாடி ரயில் நிலையம் வழியாக பயணிகள் விரைவு ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் எழில்வேந்தன், தலைமைக் காவலர் சண்முக சுந்தரம், காவலர்கள் சத்திய மூர்த்தி, பசுலூர் ரகுமான், ரேவதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு கண் காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயில் நள்ளிரவு 1.50 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது, ரயில்வே காவல் துறையினர் எஸ்-6 பெட்டியில் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பெரிய பையில் கஞ்சா பார்சல்கள் இருந்தன.
இதையடுத்து, அந்த பையின் உரிமையாளர்களான 3 பேரை பிடித்து ரயில்வே காவல் துறை யினர் தனியாக விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சந்திர கன்ஹர் (26), சுனில் துமானியன் (27) மற்றும் 15 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றை ஒடிஷா மாநிலம் பாலிங்கர் பகுதியில் இருந்து வாங்கிய தாகவும் திருப்பூரில் விற்பனை செய்வதற்காக வாங்கிச் செல்வ தாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, 12 கிலோ கஞ்சா பார்சலுடன் 3 பேரையும் வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.