கோவை: வியாபாரி துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் இலங்கையை சேர்ந்த இருவரை தேடும் பணி தீவிரம்

ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்
Updated on
1 min read

கோவையில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான இலங்கையைச் சேர்ந்த இருவரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை கடைவீதி காவல்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவையைச் சேர்ந்த சீனியப்பன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 1990-ம் ஆண்டு மார்ச் மாதம்26-ம் தேதி காய்கறி வியா பாரத்தை முடித்துக் கொண்டு, ரூ.35 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மாகாளியம்மன் கோயில் முன்பு பணத்துடன் கைப்பையை வாகனத்தில் வைத்துவிட்டு, சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனத்தை திருட இருவர் முயன்றனர். இதை தடுக்க முயன்ற சீனியப்பனை, அந்நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பணத்துடன், இருசக்கர வாகனத்தையும் திருடிக் கொண்டு தப்பினர். சீனியப்பனுக்கு தோளில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் கடைவீதி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து, இலங்கையின் மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த லீமா என்ற மகேந்திரன் (அப்போதைய வயது 25), கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற ஆனந்தராஜ் (அப்போதைய வயது28) ஆகியோரை கைது செய்தனர். இருவர் மீதும் கடந்த 25.06.1991-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த28.07.1992-ல் நிபந்தனை பிணையில் சென்ற இருவரும், அதன் பின்னர் ஆஜராகவில்லை. இவர்களுக்கு பிணை உறுதி அளித்தவர்களும், அந்த முகவரியில் இல்லை.

எனவே, இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இது தற்போது வரை நிலுவையில் உள்ளது. இருவரது விவரம் தெரிந்தவர்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in