

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் பஞ்சலிங்கம் (53). கல்குவாரி உரிமையாளர். கடந்த 15-ம் தேதி இவரது வீட்டுக்கு காரில் வந்த மர்மநபர்கள், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டு, வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் மற்றும் காசோலைகள், சிசிடிவி ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். சந்தேகத்தின் பேரில் பஞ்சலிங்கம் விசாரித்தபோது, அவர்கள் கொள்ளையர்கள் என தெரிய வந்தது. புகாரின்பேரில்கிணத்துக்கடவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை ஈச்சனாரி புறவழிச்சாலை வழியாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதில் வந்த 3 பேரிடம் விசாரித்ததில், பஞ்சலிங்கம் வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த கோவை சங்கனூர் பிரவீன்குமார் (36), சிவானந்தபுரம் மணிகண்டன் (37), கணபதி மோகன்குமார் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, கிணத்துக்கடவு சதீஷ் (36), பேரூர் செட்டிபாளையம் ராமசாமி (47), பகவதிபாளையம் ஆனந்த் (47) காளம்பாளையம் தியாகராஜன் (42) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கோவை ரத்தினபுரி மேத்யூ (60), காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோரை தேடி வருகின்றனர்.