Published : 20 Jan 2022 11:04 AM
Last Updated : 20 Jan 2022 11:04 AM

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஆன்லைன் மூலம் இழந்த ரூ.1 லட்சம் மீட்பு: சைபர் கிரைம் போலீஸார் துரித நடவடிக்கை

தூத்துக்குடி

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஆன்லைன் மூலம் இழந்த ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீஸார் மீட்டுக் கொடுத்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபக்குமார் மனைவி ஆனந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணுக்கு வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனைப் பார்த்த ஆனந்தி, அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் இணைப்பில் சென்று தனது வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ஆனந்தி தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார்.

சைபர் கிரைம் ஏடிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆனந்தியின் வங்கிக் கணக்கில் இருந்து பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் பிளிப்கார்ட் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தனர். தொடர்ந்து பணத்தை மீண்டும் ஆனந்தியின் வங்கி கணக்குக்கு அனுப்ப அறிவுறுத்தினர். இதனால், பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து மீண்டும் ரூ.1 லட்சம் பணம் ஆனந்தியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இழந்த பணம் முழுமையாக மீட்கப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தேவையில்லாத லிங்குகளை திறக்க வேண்டாம். வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x