வேலூர்: இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது

வேலூர்: இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது
Updated on
1 min read

வேலூர்: வேலூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் சாரதிமாளிகை, பஜார், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. இதனால், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த 2 பேரை மடக்கி நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போது, அவர்கள் ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் (25), ஆற்காடு காந்திநகரைச் சேர்ந்த அஜீத்குமார் (24) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து வேலூர், காட்பாடி, பாகாயம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாவி போட்டு 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in