

நாட்றாம்பள்ளி/லத்தேரி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி ஏரியில் இருந்து தினசரி மொரம்பு மண் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.
அதன்பேரில், நாட்றாம்பள்ளி காவல் துறையினர் ஏரியில் சோதனை நடத்தியபோது அதேபகுதியைச் சேர்ந்த விஜயன் (40), குமார் (23) ஆகிய 2 பேரும் ஏரியில் இருந்து திருட்டுத்தனமாக மொரம்பு மண் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டு சாலையில் லத்தேரி காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ் வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த இளையவாணன் (40), விஜயகுமார் (38), முருகானந்தம் (26), சந்தோஷ்குமார் (33), வினோத் (22), முரளி (32) என 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.