

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பாலையம்பட்டி சிவநாயகி காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவருக்கும், இவரது தம்பி மோகன்ராஜ், நண்பர் குணசீலன் ஆகியோருக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கூறினார்.
அவர் பரிந்துரை செய்ததால் தூத்துக்குடி பி அண்ட் டி காலனியைச் சேர்ந்த பாலகுரு, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் ராமச்சந்திரன் ரூ.16.35 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி அவர்கள் வேலை வாங்கிக் கொடுக்காததால் ராமச்சந்திரன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில், ரூ.2.50 லட்சத்தை திருப்பிக் கொடுத்தனர். ஆனால், மீதம் உள்ள ரூ.13.85 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அருப்புக்கோட்டை நகர் போலீஸில் ராமச்சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் ராமமூர்த்தி, பாலகுரு, சரவணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.