

தி.மலை: தி.மலை அருகே 6 மயில்களை விஷம் வைத்து கொன்ற செய்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீரனூர் ராஜாபாளையம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி காசிராஜா(57). இவரது விவசாய நிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்திருப்பதாக நேற்று திருவண்ணாமலை வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், உயிரிழந்து கிடந்த 6 மயில்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஒரு ஆண் மயில் மற்றும் 5 பெண் மயில் உட்பட 6 மயில்களையும் விஷம் வைத்து விவசாயி காசிராஜா கொன்றது தெரியவந்தது. இது குறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து காசிராஜாவை கைது செய்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “திப்பக்காடு வனப்பகுதியையொட்டி காசிராஜாவின் விவசாய நிலம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து மயில்கள் வெளியே வந்து, பயிர்களை சேதப்படுத்தியதாகவும், பயிர்களை காப்பாற்ற மயில்களுக்கு விஷம் வைத்து காசிராஜா கொன்றது தெரியவந்தது” என்றனர்.