Published : 17 Jan 2022 12:46 PM
Last Updated : 17 Jan 2022 12:46 PM

நாமக்கல்லில் திருட்டு வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி உயிரிழப்பு விவகாரத்தில் 2 எஸ்.ஐ., ஏட்டு பணியிடை நீக்கம்

நாமக்கல்: காவல் துறையினர் தாக்கியதால் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் கூறிய நிலையில், 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு ஏட்டு ஆகியோரை சேலம் சரக டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (53). சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலக ஊழியர். கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 20 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் (35) என்பவரை கடந்த 11-ம் தேதி கைது செய்தனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அரூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன் (56), சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் (45), அவரது மனைவி ஹம்சலா (45) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நடராஜன், அவரது மனைவி லலிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.

கைதான பிரபாகரன் நாமக்கல் கிளைச் சிறையிலும், அவரது மனைவி ஹம்சலா சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில், பிரபாகரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 12-ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார்.

மறியல் போராட்டம்

சேந்தமங்கலம் போலீஸார் தாக்கியதால்தான் மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்தார் என்றும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சேலம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கலைவாணி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, நல்லிபாளையம் ஏட்டு குழந்தைவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து நாமக்கல் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் கூறும்போது, மாஜிஸ்திரேட் விசாரணை நடப்பதாகவும், விசாரணை முடிவில் பிரபாகரன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x