

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 915 மது பாட்டில்கள், ரூ.17,290 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 52 பேர் கைது செய்யப்பட்டு, 882 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகர் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மொத்தம் 77 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1,797 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.