

பேரணாம்பட்டு அருகே அனுமதி யின்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குடியாத்தம் தொகுதி செயலாளர் உட்பட 4 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
பேரணாம்பட்டு அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு சந்துரு (19), முனிசாமி (17), கணேசா(13) என 3 மகன்கள் உள்ளனர். இதில், கணேசா அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி நேற்று முன்தினம் எருது விடும் திருவிழா நடத்த விழாக்குழுவினர் சார்பில் காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. காவல் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் அனுமதி மீறி கள்ளச்சேரி கிராமத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் எருது விடும் விழா நடைபெற்றது.
இதைக்காண கள்ளச்சேரி, பேரணாம்பட்டு, மிட்டபள்ளி, எம்ஜிஆர் நகர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ரசிகர்கள் அங்கு திரண்டனர். எருது விடும் விழா நடத்துவதற்கான எந்த ஒரு முன்னேற்பாடுகளும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் காளைகள் வீதியில் ஓடவிடப்பட்டன.
அப்போது, சீறிப்பாய்ந்து ஓடிய காளை ஒன்று தறிக்கெட்டு பார்வையாளர்கள் பக்கமாக திரும்பி அவர்களை முட்டி தள்ளியபடி அங்கிருந்து திரும்பி ஓடியது. இதில், கூட்டத்தோடு கூட்டமாக நின்று எருதுகளை வேடிக்கை பார்த்த சங்கரின் மகன் கணேசா (13) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கணேசாவுக்கு வலி அதிகரித்ததால் நேற்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே கணேசா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பேரணாம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்திய விழா குழுவினரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குடியாத்தம் தொகுதி செயலாளர் வேதாச்சலம் (42), சூரவேல் (43), சக்கரவர்த்தி(69), லோகு(47) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு பகுதியில் அனுமதியின்றி எருது விடும் திருவிழா நடத்தி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்ட தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே எருது விடும் திருவிழாவை நடத்த வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.