

மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞரின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம், ‘அரக்க குணம் உள்ளவர்கள் மீது எந்த கருணையும் காட்டக்கூடாது. அவர்களை திரும்ப வர முடியாத உலகுக்கு அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பலைச் சேர்ந்த பூ வியாபாரி சாமிவேல் என்ற ராஜா (26). இவர் 30.6.2020-ல் வீட்டில் தனியே இருந்த பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முகத்தை சிதைத்தும், கழுத்தை அறுத்தும் கொன்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்ஸோ மற்றும் கொலை பிரிவுகளில் வழக்குப்பதிந்து சாமிவேல் என்ற ராஜாவைக் கைது செய்தனர். இந்த வழக்கை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் விசாரித்து, சாமிவேலுக்கு தூக்குத் தண்டனை விதித்து 29.12.2020-ல் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி ஏம்பல் காவல் ஆய்வாளர் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாமிவேல் என்ற ராஜா தரப்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு விசாரித்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 வயது. மனுதாரருக்கு 26 வயது. அந்த சிறுமிக்கு தந்தை அந்தஸ்தில் இருக்க வேண்டிய மனுதாரர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார். ஒவ்வொருவர் மனதிலும் பொய் குணம், மோசடி குணம் இருக்கும். வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரின் குணத்தை முடிவு செய்ய முடியாது.
8 மில்லியன் பேரின் மரண தண்டனைக்கு காரணமாகவும், பல மில்லியன் பேரின் மரணத்துக்கு காரணமாகவும் இருந்தவர் ஹிட்லர். ஆனால், அவர் பிராணிகள் கொல்லப்படுவதை விரும்ப மாட்டார். அவர் ஒரு சைவ விரும்பி.
மனுதாரர்களை போன்றவர்களை வாழ அனுமதித்தால், அவர் உடன் இருக்கும் சிறை கைதிகளின், குறிப்பாக விடுதலையாகும் நிலையில் உள்ள கைதிகளின் மனதை கண்டிப்பாக கெடுத்துவிடுவார். அரக்க குணம் உள்ளவர்கள் மீது எந்த கருணையும் காட்டக்கூடாது. இவர்களைப் போன்றவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். அவர்களை திரும்ப வர முடியாத உலகுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்ய முதலில் தயங்கினோம். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று கூட யோசித்தோம். அப்போது கிருஷ்ணரின் கீதா உபதேசம் நினைவுக்கு வந்தது. அதில், அர்ஜூனனிடம் எதிரிகளை அம்புகள் எய்து கொல்லாமல் இருந்தாலும், அவர்கள் என்றைக்காவது ஒருநாள் உலகை விட்டு போகத்தான் போகிறார்கள் என்பார். மேலும், ஒருவருக்கு குறிப்பிட்ட பணி வழங்கப்பட்டிருக்கும்போது, அவர் அந்தப் பணியை பயம் இல்லாமலும், பாரபட்சம் இல்லாமலும் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி உள்ளது. அதில் தலையிட முகாந்திரம் இல்லை. சாமிவேல் என்ற ராஜாவுக்கு வழங்கிய தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.