Published : 13 Jan 2022 09:26 AM
Last Updated : 13 Jan 2022 09:26 AM

திருட முயன்றதாக கட்டிவைத்து தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு: ஆலாந்துறை அருகே 10 பேர் கைது

கோவை அருகே திருட முயன்றதாக வடமாநில இளைஞரை கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, 10 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தென்னமநல்லூர் செல்லும் சாலையில் உள்ள நொய்யலாற்றுப் பாலத்தின் கீழ் தண்ணீரில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞரின் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சென்று உடலை மீட்டு ஆய்வு செய்ததில், அந்த இளைஞரின் தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருப்பது தெரிந்தது.

சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஆலாந்துறை சித்திரைச்சாவடி தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 10-ம் தேதி நள்ளிரவு புகுந்த நபர், வீட்டின் கதவைத் தட்டி திருட முயன்றதாக கூறி அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து தாக்கி கட்டி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ், 11-ம் தேதி அதிகாலை சம்பவ இடத்துக்கு சென்று கட்டி வைக்கப்பட்ட நபரிடம் விசாரித்துள்ளார். அவர் மதுபோதையில் இந்தியில் பேசியதால், அந்நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல இயலாது எனக் கூறி, காலை 6 மணிக்கு காவல் நிலையத்தில் அவரை ஆஜர்படுத்துமாறு கூறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நொய்யலாற்றுப் பாலத்தின் கீழ் இளைஞர் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு தோட்டம் பகுதியில் கட்டி வைக்கப்பட்ட இளைஞர் குறித்து போலீஸார் தகவல் கேட்டுள்ளனர். 11-ம் தேதி அதிகாலையே கயிறை அவிழ்த்துக் கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றதாக, அவரைப் பிடித்து கட்டி வைத்திருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்நபர்தான் பாலத்தின்கீழ் சடலமாக கிடந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆலாந்துறை போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, அவரைத் தாக்கிய தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (56), விஸ்வநாதன் (30), சம்பத்குமார் (41), துரைசாமி (50), கார்த்திக் (31), கணேசன் (37), பொன்னுசாமி (52), ஜோதிராஜ் (50), சரவணக்குமார் (44), ஜெகநாதன் ஆகிய 10 பேரை நேற்று கைது செய்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x