பணி அனுபவ சான்றிதழை போலியாக வழங்கி உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர் கைது

கைதான பன்னீர்செல்வம்.
கைதான பன்னீர்செல்வம்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர், கடந்த 2010-ம் ஆண்டு காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

அப்போது, பல்கலைக்கழக நிர்வாகம் பன்னீர்செல்வத்திடம் அனுபவச்சான்றிதழ் கோரியது. இதைத்தொடர்ந்து, சில நாட்கள் கழித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அதன் பிறகு, 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தஞ்சை பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றியதாக போலியாக சான்றிதழ் தயாரித்து அதை திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வழங்கினார்.

இந்நிலையில், அவர் வழங்கிய பணி அனுபவ சான்றிதழ் உண்மை தன்மை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்னீர் செல்வம் வழங்கிய பணி அனுபவ சான்றிதழ் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவா ளர் சையது சபி புகார் அளித்தார்.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப் பட்டது. இதையடுத்து, உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால், தான் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய பன்னீர்செல்வம் தலைமறைவானார். அவரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், காட்பாடி பாரதி நகரில் உள்ள தனது வீட்டுக்கு பன்னீர்செல்வம் வந்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in