

செய்யாறு: செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமலை (50) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் (36) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த திருமலையை காரில் வந்த கும்பல் இரு தினங்களுக்கு முன்பு கடத்தினர். அவர்களிடம் இருந்து திருமலை தப்பினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தூசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செய்யாறு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜாராம் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை காவல் துறையினர் தேடி வந்தனர். இதில், கார் ஓட்டுநர் விஜயவேலு (31), புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்ராம் (18), வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (29), பார்த்தசாரதி (21) ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.