

சென்னை: சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதியவர் கைது செய்யப்பட்டார்.
கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தற்போது 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு சமீபகாலமாக சற்றே மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்துள்ளனர். விசாரணையில், 2015-ல் அச்சிறுமியின் உறவினர் நாராயணன்(59) என்பவர், அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நாராயணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.