

ஏர்வாடி அருகே மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே அடஞ்சேரியைச் சேர்ந்த பொன்னையா மகன் லாடமுருகன் (41). இவர் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் விசைப்படகில் மீன்பிடி கூலித் தொழில் செய்து வந்தார். ஆனால், இவர் அத்தொழிலில் சரிவர ஈடுபடாமல் விரக்தியிலேயே இருந்தார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லாடமுருகன் சிறிது மனநிலை பாதித்து காணப்பட்டார். இதனால் அவருக்கும், மனைவி முத்துலெட்சுமிக்கும் (35) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருத்த மனைவி முத்துலெட்சுமியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு அவரைக் கொலை செய்த லாடமுருகன், சிறிது நேரத்துக்குப் பிறகு தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏர்வாடி தர்ஹா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கணவன், மனைவி ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக் காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.