Published : 12 Jan 2022 10:21 AM
Last Updated : 12 Jan 2022 10:21 AM

திருப்பத்தூரில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி மோசடி: குறைந்த விலைக்கு வாங்கி பயன்பெறும் இடைத்தரகர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக அரசு மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள போவதாக வதந்தி பரப்பி மக்களை அச்சுறுத்தி குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபமடையும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட ஜெயமாதா நகர், குடியான குப்பம், பார்சம்பேட்டை, பழைய ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டன.இந்த இடத்தில், சிலர் வீடுகள் கட்டாமல் காலி மனையாகவே வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா ரத்து செய்யப்போவதாகவும், அரசு வழங்கிய இடத்தில் 20 ஆண்டுகளாக வீடுகள் கட்டாமல் காலி மனையாகவே இருப்பதால் அந்த காலி மனைகளை தமிழக அரசே மீண்டும் பெற்றுக்கொள்ளப்போவதாக சிலர் வதந்தியை கிளப்பினர்.

இடைத்தரகர்கள் சிலர் காலி மனை பெற்றுள்ள வசதியில்லாதவர்களை தேடிச் சென்று, அரசு வழங்கிய இடத்தில் இதுவரை நீங்கள் வீடு கட்டாததால் அந்த இடத்தை இனி நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. எனவே, உடனடியாக விலைக்கு விற்றால், பணமாவது கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, பல லட்சம் மதிப்புள்ள காலி மனைகளை குறைந்த விலைக்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் வாங்கி குவித்து வருகின்றனர். இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் இடைத்தரகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து காலி வீட்டு மனைப்பட்டா வைத்துள்ளவர்கள் கூறியதாவது, ‘‘எங் களுக்கு வழங்கப்பட்ட காலி வீட்டு மனையை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இடைத்தரகர்கள் எங்களிடம் கூறி, காலி வீட்டு மனையை குறைந்த விலைக்கு விற்று விடுங்கள் என வற்புறுத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வருவாய் துறையிடம் புகார்

இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ‘‘பொதுவாக வீட்டு மனை பட்டா பெற்றவர்கள் அடுத்த 6 மாத காலத் துக்குள் அங்கு வீடு கட்ட வேண்டும். இல்லை என்றால் அந்த இடத்தை மீண்டும் அரசு எடுத்துக்கொள்ள வழிவகை உண்டு. இருந்தாலும், இலவசமாக வழங்கப்பட்ட இடங்களை சிலர் ஏமாற்றி பெறுவதாக புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட பட்டாதாரர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிடலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x